LIC

Tuesday, April 22, 2014

தண்ணீர்... தண்ணீர்...!


ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

“யாரைப் பார்க்க வேண்டும்?”

“உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்”

வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?!

இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி (Aabid Surti) என்பவர். இவர் விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியரும் கூட. ஆனால் இவர் தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவது பல்லாயிரம் லிட்டர் தண்ணீரின் சேமிப்பைத்தான். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 414,000 லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்!



70-களில் இருக்கும் இவருக்கு, இளம் வயதிலேயே தண்ணீரின் அருமையை மும்பை வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது. ஒரு முறை ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் ஒழுகிய குழாய் இவரை ரொம்பத் தொந்தரவு செய்திருக்கிறது. ஒழுகும் குழாயை சரி செய்வதில் என்ன கஷ்டம் என்று பலரிடமும் பேசிப் பார்த்த போது, குழாய் சரி செய்பவர்கள் கிடைப்பது அரிதென்றும், கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துச் சரி செய்யும் வசதி பலருக்கும் இல்லையென்றும் தெரிய வந்தது.

ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்! அவர் அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம்!

அத்துடன் இல்லாது, எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம் என்ற செய்தியையும் வாசித்திருக்கிறார்.

இந்த இரண்டு விஷயங்களையும் அவரால் நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. சரியாக 2007-ல் (உலக தண்ணீர் வருடம்) அவருக்கு உத்தர பிரதேச அரசிடமிருந்து சாகித்ய சந்த்ஸா (Sahitya Santhsa award) விருது ரூ.100,000 கிடைத்தது. உடனடியாக அந்தப் பணத்தை இந்தப் பணிக்குச் செலவிட முடிவெடுத்து விட்டார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தன்னுடன் ஒரு குழாய் பழுது பார்ப்பவரைக் (plumber) கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று இலவசமாக குழாய்களைப் பழுது பார்த்துத் தருகிறார். இப்போது இவருடையது ஒரு இயக்கமாகவே மாறி விட்டது. பள்ளிக் குழந்தைகளையும் இவருடைய தண்ணீர் சேமிக்கும் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.

“A penny saved is a penny earned” என்று சொல்வார்கள். அது தண்ணீருக்கும் நிச்சயம் பொருந்தும். சிறு துளி பெரு வெள்ளமல்லவா? குறிப்பாகப் பருவ மழை பொய்த்துப் போகும் இந்தக் காலத்தில், ஆறு குளங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், தனி மனிதனால் செய்யக் கூடியவற்றவைகளையாவது நாம் செய்ய வேண்டுமல்லவா? அதுதானே நாம் நம் சந்ததியினருக்கு விட்டு போகும் செல்வம்? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் வறண்ட பூமியைத்தான், உணவும், நீரும், இல்லாத பூமியைத்தான் அவர்களுக்கு விட்டுப் போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்! :(

நாம் ஒவ்வொருவரும் ஆபிட் சுர்தியாக ஆக முடியா விட்டாலும், தண்ணீரைச் சேமிக்க நம்மாலான பல எளிய வழிகள் இருக்கின்றன.

ஒழுகும் குழாய் இருந்தால் உடனடியாகச் சரி பார்க்கலாம்.

காலையில் பல் துலக்கும் போது பலரும் தண்ணீரைத் திறந்து வைத்து, அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, அவர்கள் பல் துலக்குவார்கள். அப்படியில்லாமல் தண்ணீரை வேண்டுமென்னும் போது மட்டும் திறந்து கொள்ளலாம்.

பாத்திரம் துலக்கும் போதும் சிலருக்கு தண்ணீர் போய்க் கொண்டே இருக்க வேண்டும், அல்லது முழு வேகத்தில் திறந்து விடுவார்கள். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

குளிக்கும் போதும் அப்படியே. சோப்பு போடும் போது தண்ணீரை நிறுத்தி வைக்கலாம். குளிக்கும் போது கனவு கண்டு கொண்டிருந்தாலும் (மற்ற விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும்), தண்ணீர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. அதனால் குளியல் கனவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். (இதை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்!)

சிலர் தண்ணீர் குடிப்பதற்கென எடுக்கும் போது தம்ளர் நிறைய எடுத்து விட்டு, கால் தம்ளர் மட்டுமே குடித்து விட்டு மீதியைக் கீழே ஊற்றி விடுவார்கள். அதற்குப் பதில் வேண்டுமென்கிற அளவு மட்டுமே எடுத்துக் குடிக்கலாம்.

சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!


அன்புடன்
LIC K.S.Palanisamy, B.A.,(Yoga)
22.04.2014

No comments:

Post a Comment