மாற்றம் ஒன்றே மாறாதது..
LIC K.S.Palanisamy
22.04.2014
சமீபத்திய ஒரு உலக பார்வையில், மூன்றாம் உலகப்போர் வர எவைகளெல்லாம் காரணமாயிருக்கும் என்ற கோணத்தில் நடந்த ஆய்வில் தண்ணீர் தேவை என்ற ஒரு கருத்து மேலோங்கி காணப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் சற்றே ஆழமாக யோசித்தோமானால் அதற்க்கு நம்மிடமே அநேக ஆதாரத்துடன் கூடிய விடை உண்டு. ஆம், நகரத்தை குறித்து பின்னர் யோசிக்கலாம் அதற்க்கு முன் நமது பூர்வீகம், நாம் பிறந்த, வாழ்ந்த கிராமங்களை நோக்கி பார்த்தாலே அது தெளிவாக புலப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டை சுற்றிலும் இருந்த குளங்கள் இன்று இல்லை, அப்படியே இருந்தாலும் அவைகளில் தண்ணீர் இல்லை, அல்லது தண்ணீரை சேமிக்கும் தகுதியற்றதாய் உள்ளது; தகுதியற்றது என்ற சொல்லை கொடுத்த பெருமை நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் மக்காத (பாலிதீன் போன்ற) குப்பையையே சாரும். மேலும் கட்டுமானத்துறையின் அசுர வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் மடிந்துபோன ஆறுகள்; சில வருடத்திற்கு முன் கூட நாம் நீந்தி பழகிய ஆற்றில் இன்று மணலும் இல்லை நீரும் இல்லை, விளைவு உணவுச்சங்கிலி பாதிப்பு. இதை தொடர்ந்து மிகுதியான தண்ணீர் தேவையால் அசுர வேகத்தில் இறங்கிவரும் நிலத்தடி நீர்மட்டம். ஒரு காலத்தில் வெறும் இருபது அடியில் கிடைத்த நீர் இன்று இருநூறு அடியை தாண்டியும் கிடைப்பதில்லை. மலைச்சரிவில் இருந்த மரங்களெல்லாம் இன்று அரையடி உயரத்தில் முளைக்கும் காரட், முட்டைகோஸ், தேயிலைகலாக உருவெடுத்ததால் மேகத்தை மறைத்து மழையாய் மாற்றும் மந்திரம் மறந்தது, விளைவு பொய்த்துப்போன பருவ மழை, காணாமலே போன கோடை மழை. இவ்வளவு ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக நம் தமிழகம் கூட தண்ணீருக்காகத்தான் போராடி வருகிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இன்று குடிநீரை கூட பணம் கொடுத்து தான் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், அதை விட கொடுமை அதை கூட நம் ஊர் காரன் கையில் வாங்கி குடிக்க தயக்கம், நம் தண்ணீரை எடுத்து நமக்கே கொடுக்க வேண்டும் என்றாலும் அதை பன்னாட்டு நிறுவனம் தான் செய்யவேண்டும் என்ற வீம்பில் இருக்கிறோம். ஏன் அதை கூட நம்ம ஊர் காரன் ஒழுங்காய் செய்யமாட்டானா அல்லது அதிலும் சாதி மதம் என்று மதம் பிடித்து நிற்கிரோமா? துணி விற்க வந்தவன் நமது துணியை உருவியநிலையில், மீண்டும் நம்பினால் மீண்டும் ஒரு விடுதலை போராட்டம் நோக்கி செல்லவேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்படுவோம்.
தாராளமாக கிடைத்தாலும் தேவைக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துவோம், நம் சந்ததிகளும் பிழைக்கட்டும்.
No comments:
Post a Comment